நிலையில்லாதவள்

அன்பே
ஆருயிரே
இனியவளே
ஈகையில் கொடையாளே
உணர்வே என்
ஊக்கமே
என்னுயிரே
ஏன் இந்த மாற்றம்
ஐயமில்லா என் மனம் எதிலும்
ஒன்றாமல் ஒவ்வொரு வினாடியும்
ஓராயிரம் யுகமானது பெண்ணே.....!
பெண்ணும் காலமும் ஒன்று
இரண்டும் எளிதில் கனியாது

அமுதமே
ஆனந்தமாய் வாழ
இப்பாவையாகிய பூவை மொய்க்கும்
ஈயாய்
உன் உயிரை குடிக்கும்
ஊழியனாகும்
எனக்கே எனக்கான வாய்ப்பை
ஏன் பறித்து கொண்டாய்
ஐந்து நாழிகை கூட பிரியா
ஒற்றுமை வேண்டும் என கூறியவளே
ஓடமாய் தத்தளிக்க விட்டு சென்றதேன்.
பெண்ணும் கடலும் ஒன்று
இரண்டிலும் கரை ஏறுவது கடினம்.....

அச்சமில்லை அச்சமில்லை என்ற பாரதியே
அஞ்சி போயிருப்பான் உன் செயலை கண்டு
ஆசை காதலியே -நீ
இல்லாளாய் இருக்க
ஈனஸ்வரத்தில் நான் கேட்டது
உனக்கு கேட்காது போனதா
ஊரார் முன்னிலையில் கரம் பிடிக்க
எத்தனித்தும்
ஏன் உனக்கு
ஐயம் - நாம்
ஒன்று பட்டால் வாழ்வு உண்டு

ஓவியமே.........!
பெண்ணும் ஓவியமும் ஒன்று
இரண்டிற்கும் உயிருண்டு
ஆனால் உணர்வற்ற ஜடங்கள்........

அன்பாய்
ஆதரவாய்
இன்பமாய் இருக்க வேண்டியவள்
ஈட்டியாய் தைத்ததால்
உனக்கானவன்
ஊசலாய் தவிக்கிறேன்
எங்கும் ஜீவித்திருக்கும் காதலை அடைய
ஏக்க பெருமூச்சு விடுகிறேன்
ஐந்தாண்டு காதலில்
ஒழுக்கமாய் நடந்தும்
ஓரங்கட்டபட்டதன் காரணம் என்னவோ?
பெண்ணே கல்லாகி போனாயோ.....?
பெண்ணும் கல்லும் ஒன்று
பெண் நிலவாய்
நிலவு கல்லாய்
பெண் நிலவென்றால் அவள் கல்தான்!

வானளாவிய தென்றல் பெண்ணே
கார்முகிலன் தீண்டியும் 
உன் செவி குளிராது போனதேன்?
உன் நினைவுகளில் சுழன்றாலும் 
மனம் எதிலும் லயிக்காது
ஆர்பாட்டம் செய்கிறது பிரிவை தாளமுடியாமல்
இதயத்தில் முளைத்த காதலை
இதயத்துனுள்ளே புதைக்க முயன்றதால்
நீரூபூத்து  கண்கள் மங்கி கனநீரை செங்குருதியாய்
கசிந்து வருகிறது பெண்ணே .......!

பெண்ணும் நீரும் ஒன்று -எதனுடனும் 
ஒன்றிவிடும் ஆற்றலால் பெண் நீர்தான்....!!

Comments