அறிவுரைகள்

அன்பை பொழிய அன்னை
அரவனைக்க தந்தை, எத்தனை உறவுகளிருந்தாலும்
அன்னை தந்தை உறவு
அத்தனை உறவுகளிலும் அற்புதமான உறவு .....!

ஆண்டவன் படைப்புகள்
ஆயிரம் இருந்தாலும்
ஆதவன் போல் உயர்ந்த பெற்றவர்கள் பற்றி
ஆயிரம் எடுத்துரைத்தாலும் மிகையாகாது....!

இப்படித்தான் வாழவேண்டுமென
இலக்கணம் வகுத்து
இவனும் அவ்வழியில் செல்லவேண்டி
இட்ட கட்டளைகள் பல....

ஈன சொல்லுக்கு ஆளாகாதே, ஈகை கொள்ளென
ஈருயிர்கள் ஓருயிராகி ஈரைந்து மாதம் சுமந்து
ஈன்றவர்களுக்கு நிகர்
ஈரேழு உலகத்திலும் இல்லை...

உண்மை பேசி, உறவுகளை மதித்து,
உணர்வுகளை கட்டுபடுத்தி,
உழைப்பாயெனில் வாழ்வில்
உச்சம் பெறலாம் என்றவர் அன்னை....!

ஊமை போல் இருந்தவனை
ஊக்கம் கொடுத்து
ஊரார் போற்றும்படி அறிவை
ஊட்டியவர் என் தந்தை...!

எளிமையாய் இரு,
எதையும் எளிதாக எடுத்துக்கொள்,
எகத்தாளம் கொண்டால்
எக்காலமும் ஏற்றமில்லை என்றவர் அன்னை...!

ஏற்றத்தில் வந்த சிறு
ஏமாற்றத்தில் விழுந்தவனை
ஏணியாய் இருந்து
எற்றிவிட்டவர் தந்தை....!

ஐந்து வயது முதல்
ஐம்புலனும் கட்டுபடுத்தினால்
ஐம்பதிலும் தளர்ந்திடாமல்
ஐயமின்றி வாழலாம் என்றவர் அன்னை...!

ஒருமை வெறுமை,
ஒற்றுமை கொள்ளென பல நல்ல
ஒழுக்கங்கள் கற்று கொடுத்து
ஒளிமயமான வாழ்விற்கு வழிவகுத்தவன் தந்தை...!

ஓய்வுக்கு பின்னும் சோர்ந்திடாமல்
ஓசையின்றி வாழென
ஓராயிரம் அறிவுரைகள்
ஓதியவர்கள் என் பெற்றோர்.......!

அன்னையை விட சிறந்த கோயில் இல்லை
தந்தை சொல்லை விட மந்திரம் இல்லை என்ற
ஒளவை கூற்று படி வாழ்வோம்....!
வாழ்வில் ஏற்றம் பெறுவோம்....!!

Comments