மரத்து போன மரங்கள்..!

 
என்னை பற்றி சொல்லி 
தெரிய வேண்டியதில்லை - நான் 
சொல்லில் அடங்குபவனும் இல்லை 
என்னால் தான் சமூக மாற்றமே 
என்றால் என்னுள் கர்வம் .....!

இப்பொழுது 
இவன் யார் என்ற கேள்வி எழுமே?
இவனே கேள்வியும், இவனே பதிலும்,
இவ்வுலகின் மாற்றம் இவனால் தானென்றால் 
இவனுக்கு கர்வம் இருக்காதா என்ன ?
இவன் வேறுயாருமல்ல மரமெனும் 
அடைமொழிக்கு சொந்தக்காரன்......!

விதையாய்  காற்றில் கலந்து 
வயல் வரப்புகளில் விழுந்து 
வாய்க்கால்  நீரை பருகி 
வீண் விழலாகி போகாமல் 
விருட்ஷமாகும் வித்தை கற்றவன்........!

 மாற்றங்கள் எண்ணிலடங்காதது என்னால் 
எப்படி என்கிறீர்களா....? 
விருட்ஷமான நான் 
மேகத்தை மெல்ல வருடி 
மழையாய் பெய்யவும் செய்வேன் 
மேகத்தின் தேகத்தை தீண்டாமல்
மழையை பொய்க்கவும்  செய்வேன்...
மழை பெய்வதும் மழை பொய்ப்பதும
மானிடனே  உன் கையில் தான்.......!

மனித குலதின் வளர்ச்சிக்கு 
மழை ஒன்றே ஆதாரம் 
மழைக்கு மரம் ஆதாரம் 
மனித வளர்ச்சியின் 
மழைக்காதாரமான  மரத்தை 
மரமாகி(ஜடமாகி) போன 
மனிதனே வெட்டும் அவலத்தை,
நினைத்து கண்ணீர் வடிப்பதுண்டு....!

சமூகத்திற்கு பலன்கள் தந்தும் 
சமூகத்திற்கு வழிகாட்டியாய்  இருந்தும் 
சமூகத்தில் உள்ளவர்களின் 
வாகனங்களின் நச்சு புகையை,
தொழிற்சாலைகளின் மாசு படிந்த காற்றை 
அதிகமாய் சுவாசித்து 
என் தன்மையை இழந்து 
எனக்கு தீங்கு நினைத்திடும் 
உனக்கு தீங்கு வந்திடுமோ?
என கண்ணீர் வடிப்பதுண்டு.....!

விஞ்ஞானத்தின் வளர்ச்சி என்ற பெயரில்
ஆராய்ச்சி மேற்கொண்டு
வானுயர்ந்து வளர்ந்து 
சுதந்திரமாய் கிளைகளோடு 
கூடிய இலையாய்,
பூவாய், காயாய், 
கனியாய் பலன் தந்தவனை 
போன்சாய் மரங்களாய் 
புட்டியளிலும்,  தொட்டியிலும் இட்ட 
மனிதனை நினைத்து கண்ணீர் வடிப்பதுண்டு...!

மழை பெய்தால் நிலத்தடி நீர் 
மட்டம் உயரும், பச்சை பசேலென 
மரங்கள் செழித்து வளர்ந்து 
மகத்துவம் ஏற்படும்,
மரங்களை தொட்டியிலிட்டால் 
மழை எப்படி சாத்தியம் என்பதை 
மறந்த, சிந்தனையில்லாத 
மனிதனை நினைத்து கண்ணீர் வடிப்பதுண்டு...!

இத்தனையும் மறந்து போன மனிதா 
கால சுவட்டின் பக்கங்களில் 
பின்னோக்கி சென்று பார் 
முற்கால மனிதன் மரத்தின் 
மகத்துவம் அறிந்திருதான் 
மரங்களை பாதுகாத்தான் அதனால் 
மாதம் மும்மாரி பெய்ய செய்தவன்,
இக்காலத்தில் ஆண்டுக்கொரு முறை 
பெய்ய வைக்கவே  யோசிக்கிறேன்..!
இனியேனும் சிந்தித்து
மரங்களை பாதுகாத்திடு,
இல்லையேல்
அழிய போவது நான்..........!
அல்லவே அல்ல நீ ..............!  

Comments