விசித்திரமா...! அழகு சித்திரமா...!!


ஏகாந்தமான இரவு பொழுது,

தன்  பொன்னிற மேனியை மறைத்து கொண்டு  
வெட்கப்பட்டு முகம்  காட்டும்  பால் நிலவு,

பெரியதும் சிறியதுமாய்
நகரும் மேகங்கள்,

நகர்ந்து செல்லும் மேகங்களிடையே
ஒளிர்ந்து மிளிரும் நட்சத்திரங்கள்,

கார்மேகமும் நிலவொளியும் இரண்டற
கலந்து காட்சியளிக்கும் கருநீல வானம்,

கன்னுக்கெட்டியவரை ஒரே சமமாய்
காண்பவர் கண்குளிரும் நீர்பரப்பு,

நீல வானமும், நீளமான.....
நீர்பரப்பும்  ஆரத்தழுவும் காட்சி,

நிற்கும் மரங்களின் மேல் படும் ஒளியால்
நீரில் விழும்  பிம்பங்கள்,

நீரில் துள்ளி குதித்திடும்  மீனினம்,
குதித்திடும் மீன்களால் தெறிக்கும் நீர்த்திவலைகள்,

தெறிக்கும் நீர்திவளையால்
தவழும்  வட்ட அலைகள்

தவழும் நீரை தழுவும் ஒளியால்
தகதகக்கும் வைரம் போல்  ஒளிசிதறல்கள்,

கரைகள் எங்கும் பச்சை பசேலென
பட்டாடை போர்த்தியது போல் புல்வெளி,

புல்வெளியை  இதழோடு இதழாக
இரவு முழுதும் முத்தமிடும் பனித்துளி,

நிசப்தமான சூழலில் மெல்லிய ஒலியோடு
மிதமாய் வருடி செல்லும் தென்றல், என

இயற்கையில் எத்தனையோ விசித்திர காட்சிகள்
இரசித்திட இருந்தும்.......  உன் 
கரம் பற்றி தோள்சேர்ந்து
கருவிழியாம் உன் கயல்விழியை,
மையிட்ட உன் மைவிழியை, கண்டதும்
மையல்கொள்ளும்  உன் மயில் விழியை
காணும்பொழுது மட்டும் ஏனோ......?
அகிலத்தில் உள்ள
அத்தனை விசித்திர காட்சிகளும்
அழகு சித்திரமாய், கருணை முகம் கொண்டு 
அன்பு சிற்பமாய் விளங்கும்  உனக்கு முன்
அவ்வளவும் அற்பமாகி போனதாய்
உணர்கிறேனடி பெண்ணே.........!!

Comments