குடி குடியை கெடுக்கும்...! குடி அரசின் வருவாயை பெருக்கும்..!!





குடி...  மனிதா  குடி..
குடிக்கும் குணம் வந்து
குடித்தபின் உன்
குடும்பம் வாழ்வதெப்படி..?

குடி... சிந்தித்து அளவாய் குடி
குடித்தபின்னே நீ நிதானமிழந்து
குப்புற வீழ்வது அப்படி..?

குடியானவனே  குடி...
குடித்தபின்னே உன் செயலால்
குல பெருமை தொலைவது அப்படி...?

குடி...  நன்றாய் குடி
குடியரசின் அச்சானி சுழல
குடிகளின் அரசே கடை திறந்து
குடிக்க வைப்பது அப்படி...?

குடி... தினமும் குடி உன்
குடி கெடுக்க
குடியரசே கடை திறந்து
குடிக்க வைப்பதற்கேனும் குடி..

குடி... குடிக்க நீ ஒவ்வொருமுறையும்
குப்பியை  திருகும்போதும் உம்மீது
குண்டுகளாய் குத்திக்கொல்வது தெரிந்தபின்னும்
குடியை நிறுத்திவிடாமல்
குடிக்கிறாய் அப்படி....

குடி.. எதற்கும் அஞ்சாமல் குடி
குடிக்க அரசே வலியுறுத்துவதால்
குன்றா வருவாய் பெருகிட 
குடல் அழுகும் வரை குடி...

குடியானவனே அதிகமாய் குடி
குடித்த பின்னே உன்
குடல் அழுகி 
குருதி உறைந்து மருத்துவம் செய்தே
குடும்பம் சீரழிவதைவிட
குடித்தே விரைவில் செத்தொழி...  இல்லையேல்

குடிப்பதற்கு முன் யோசி
குடிப்பதால் உன் 
குடி மட்டுமல்லாது பிறர்
குடியும் சேர்ந்தே கெடும்,
குடித்தபின் குடலை புன்னாக்கும்,
குடி ஒருவனை குற்றவாளியாக்கும்,
குடிபோதை தவறு செய்ய தூண்டும்,
குடி ஒருவனை நோயாளியாக்கி
குடும்பத்தை சீரழிக்கும்,
குழப்பம் பல ஏற்படுத்தும்,
குழந்தை தொழிலாளரை உருவாக்கும்,
குடியானவனே சிந்தி
குடியை விட்டொழி......

குடி குடியை கெடுக்கும்...!
குடி அரசின் வருவாயை பெருக்கும்..!!

Comments