தங்க வளையலின் ஏக்கமென்பது

முன்வந்து கரம்பிடித்தவளின் 
முகம்தெரியா அளவிற்குத் தெளிவின்றி
முப்பொழுதும் ஓயாமல்
முழுக்கக் குடித்துவிட்டு ஏளனமாய்
முனுமுனுத்தவனின்  ஏச்சுபேச்சிற்கு
முந்தானையை கண்ணிலொற்றி
முகந்தொங்கி விசும்பி ஓய்ந்தவள்......
முன்னரேக்  கனவனை புறந்தள்ளி
முடிவெடுத்தாள் 
முத்தந்தந்தப்பிள்ளை எதிர்காலம் காக்க..

முந்தானையை பற்றிக்கொண்ட பிள்ளையை
முன்னுயர்த்த திக்குத்தெரியா  நேரத்தில்
முதல் வகுப்பிற்கு பணங்கட்ட
முதன்முதலாக தன்னிடமிருந்த
மூக்குத்தியில் துவங்கிப் படிப்பில்
முன்னேற முன்னேற 
முறுக்குச் சங்கிலியோ கைவளையலோ
முக்கியமில்லை எதுவும்
முக்கியம் மேற்ப்படிப்புதான் என்றவளின் 
முகம் பார்த்து 
முடித்து வாங்கியப்  பட்டத்தை
முதன்மையாக  அன்னையின்
முன்பனிந்து அன்னமிட்டவளின் 
முழங்கைத் தொட்டு
முகர்கையில் அவள் மிடுக்காய் 
முகத்தில் பூத்த முறுவல்களுக்கு
முன் தங்க வளையலின் ஏக்கமென்பது
முழுதும் கர்வமாய் காட்சியளித்தது...!

Comments